.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-..-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-..-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-..-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
-------------------- நான் புதிதாக எதையும் எழுதிவிடவில்லை. பழைய மரம் புதிய பூக்களைப் பூப்பதுபோலதான் இந்தக்கவிதைகளும்----------------------
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
sidebilde.jpg
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
sidebilde2.jpg
User Rating: / 0
PoorBest 

துன்பம் நேர்கையில்...

 

மணி அடித்துக்கொண்டே இருந்தது. சில அழைப்புகளுக்குப் பின் ஒரு கறார்குரல் அவசரமாய் எடுத்தது.
¨ஹலோ¨
¨கண்னன் நான் மலர் கதைக்கிறேன் ¨
”சொல்லு.. ¨
¨இரண்டரை மாசம் ஆகிட்டதால இண்டைக்கே வரட்டாம். நான் வேலைக்கு வரமாட்டேன் என்று சொல்லிட்டேன். நீங்க வேலையை அரைநாள் லீவு போட்டிட்டு மத்தியானம் போல வந்தீங்கன்டா, அபோஷன் முடிச்சு நானும் கண்முழிச்சிடுவேன் ¨
¨ம். நான்தான்... நீயாவது கொஞ்சம்... கவனமாக இருந்திருக்கலாம் தானே. ஏற்கனவே அங்க நோ இங்க நோ எண்டு நாரியைப்பிடிச்சுக்கொண்டு திரியிறாய் ¨
¨பிள்ளைகளும் வளந்திட்டினம்...வருசம் பிறந்ததும் அதுவும் மனசே சரியில்லை, இரண்டோட மூன்றா பெத்து வளப்பமே¨
¨ச்சீ அதெல்லாம் அண்டைக்கே கதச்சு முடிவெடுத்தாச்செல்லா? இப்ப புதுசா ஒரு பிரச்சனையை கிளப்பாத. இப்பவே மனுசன் செத்தப் பிளச்சுக்கொண்டிருக்கிறான்...நீ போ. நான் இரண்டு மணி போல வாறன். ¨

உலகத்தில் உள்ள அழுக்கெல்லாம் அவள்; மேல் படிந்ததுபோல குளித்தாள்;. இரண்டு பிள்ளைகள் போதும் என்று இருவருமாய்தான் முடிவெடுத்தனர். இது மூன்றாவது.  இரண்டு பிள்ளைகள் போதும் என்று முடிவெடுத்ததற்குப் பதிலா இரண்டு கருக்கலைப்க் காணும் என்று முடிவெடுத்திருந்தால் இதைப் பற்றி யோசிக்கலாம். கண்னனிடம் இதைப்பற்றி விளக்குவது அவளுக்குக் கடினமாகவே பட்டது? அவள் விம்மியழுத கண்ணீர் குளித்த நீருடன் கலந்து கொண்டது.

வாழ்க்கை, குழந்தை, சந்தோசங்கள், பிரச்சனைகள் பற்றிய விளக்கங்களும் அளவுகோல்களும் அவனைப் பொறுத்தரை வேறு. தன்னைத் தான் அவள் மாற்றியாக வேண்டும். இதுதானே வழமை. அனாவசியமாக அவனுடன் மல்லுக்கு நிற்பதையேனும் தவிர்க்கலாம். யதார்த்தங்களைக் கூட சுமையென்று கூறுபவன். அவனது குத்தல்களுக்கு மருத்துவமனைக் கத்திகள் பரவாயில்லை என்றது மனம். 

மருத்துவமனைப்பேருந்து தரிபிடம்.
வசந்தம் விடைபெற்று குளிர்காலத்தின் முதல் பனி சாலைநெடுக கொட்டிக்கிடந்தது. என்னைச் சுற்றிய உலகம் முழுதும் வயிற்றைத் துளைக்கும் குளிர். தேசமெங்கும் காற்றின் ஊடுருவளோடு தூரக் கேட்டது இலையுதிர்ந்த கிளைகளில் பறவையெரலிகள். அதோ பெரிய மருத்துவமனை. எத்தனை முறை வந்தாயிற்று. பெற இரண்டு. கலைக்க இரண்டு.  இது மூன்றாவது.

ஓட்டமும் நடையுமாக மருத்துவமனைக்குள் நுழைந்தாள். அந்த இடமே ஒரு மயானம் போலதான் இருந்தது. மூன்றாவது முறையாக ஒரு உயிரக்கொலை. என்னதான் சட்டபூர்வமானதென்றாலும் கொல்வது இல்லையென்றாகிவிடுமா?

விண்ணப்படிவம் நிரப்ப வேண்டும். இதெல்லாம் பழக்கப்பட்ட, இல்லை பாடமாக்கப்பட்ட விடயம்தானே கைகள் தானாகவே அனைத்தையும் நிரப்பி முடித்தன.  என்ன எத்தனையாவது முறை என்ற இடத்தில் மூன்று என்று மட்டும் மாற்ற வேண்டும்.  இதைப்படிக்கும் இந்த நர்ஸ்மார்கள் என்ன நினைப்பார்கள் என்று ஒரு முறை மனம் சஞ்சலப்பட்டது. இந்த கசப்பான நேரங்களுக்கும் பெண்ணுகள் தானே முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. எங்கள் சமூக அமைப்பில்தான் இப்படியோ. இன்றைக்கேனும் கண்னன் முழுநாள் விடுப்பு எடுத்திருக்கலாம். என்னை அணைத்தபடி இந்த விண்ணப்பப் படிவத்தையாவது நிரப்பித் தந்திருக்கலாம். 

அவள் கண்முன்னே எல்லா ஏற்பாடுகளும்... கத்தி, கத்தரீ இன்னும் பெயர் தெரியாத ஆயுதங்கள். மயக்கம் தருவதாய்சொல்லி அவளை மயக்க மருந்தை சுவாசிக்கச் சொன்னார்கள். வெள்ளை நிறத்தில் பெரிதானா வட்டம் ஒன்று சீராக வளைந்து வளைந்து சின்னதாகிப் போய் மறைந்து...அவளைச் சுற்றி மயான இருட்டாகிப் போனது.

சாத்தான் மரத்தின் மீதிருந்து பாடிக்கொண்டிருந்தான். எங்கும் சிவப்பு மயம். சாத்தான் மட்டும் கடும் கறுப்பு கழுத்தில் சாண்டில்யன் கதைகளில் வரும் கபலீகர்கள் அணியும் மண்டையோடுகள்.  மஞ்சற் பற்களுக்கிடையில் ஏதோ குரல். எங்கே குழந்தை? பசிக்கிறது என்பது தெளிவில்லாமல் கேட்டது. பருத்த மரத்தின் இலைகள் ரட்சத கிளைகளிலிருந்து கலைந்து கொண்டிருந்தன. அவளை நோக்கியல்லவா வருகின்றன. ஓடவேண்டுமே.. சிரிப்புச் சத்தம் அதுவும்  அவளை நோக்கித்தான் வருகின்றன. சாத்தானின் கூறிய நகங்கள்  அவள் வயிற்றை நோக்கி நீள்கிறது. வயிறு பிளபடுகிறது. அவள் இறந்து கொண்டிருக்கிறாள். அவள் கருப்பை நசுக்கப் படுகிறது. பிழிந்த இரத்தம் சிவப்பாய் ஓடுகிறது. சின்ன சிசுக்கள் துடிக்கின்றனவே. வேண்டாம் அதை ஒன்றும் செய்யாதீர்கள். ஏன் அவளது குரல் கேட்கவில்லை. அவள் இறந்து விட்டாளா? இது பேய்களின் நகரமா? பாட்டி சொல்வாளே அந்த நரகமா? இதோ சின்னதாய் ஒரு வெளிச்சம். அவள் கண்கள் திறபடுகின்றனவே....

தனித்து அறையொன்றில் படுத்தப்பட்டிருந்தாள்;. சீரில்லாத சுவாசம் சுடாயிருந்தது. கனமான கண்ணிமைகள் மீண்டும் மூடிக்கொண்டன. உடல் ஓய்திருந்தது. கைகள் ஒருபுறமாய் கண்கள் மறுபுறமாய் ஆதரவாய் தேடியது. கண்னன் இன்னும் வரவில்லை. அவள் நெஞ்சிலிருந்து வயிறுவரை வருடிவிட ஒரு கைவேண்டும் போல தாகம் எடுத்தது.  நர்ஸ் ஓடி வந்தாள். ஏதாவது வேண்டுமா என்று கனிவாகக் கேட்டாள். கேட்டதுமே ஒரு தொலைபேசி தந்தாள் கூடவே கொஞ்சம் தண்ணீர் தட்டில் உணவு. அதே புன்னகையுடன் கதவைச் சாத்திச் சென்றாள்.

¨கண்னன் எங்கே நிக்கிறீங்க? ¨
¨வாரன் பொறு கார் ஓடிக்கொண்டிருக்கிறன். வை. ¨
மனம் தவித்துக்கொண்டேயிருந்தது. அரைமணி நேரம் காத்திருப்பிற்குப் பின் கண்னன் உள்ளே வந்தார்.
¨உனக்கு கொஞ்சம் கூட பொறுமை என்ற சாமான் இல்லை மலர். எத்தனை தரம் சொன்னனான் கார் ஓடேக்க டெலிபோன் எடுக்காத என்டு. பிடிச்சா இப்ப ஐநூறு தெரியும்தானே. சரி என்னவாம் டொக்டர். நாளைக்கு வேலைக்குப் போகலாமாமே. இல்லாட்டி லீவு கேட்டு வாங்கு. கெரியா. இன்றைக்கு ஒவர் டைம் வந்திருக்கு. உன்னை வீட்டை விட்டுட்டு உடன போகவேணும். ¨

ஏதோ ஏமாற்றம் மனதில் தோன்றியதானாலும் அது வாய் வழியே வலுவிழந்த புன்னகையாய்தான் வந்தது. பாரதிதாசன் பாடலொன்றை மெலிதான சத்தத்தில்  ’ துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ...’ மனசு மீட்டிக்கொண்டது. கிளம்பினோம்.

¨எத்தனை தரம்தான் கண்னன் இப்படி வந்து படுக்கிறது. பேசாம கருத்தடை செய்தா என்ன என்று யோசிக்கிறன். டொக்கடர் பொம்பிளைகளுக்கு எதோ கருப்பையை எடுக்கிறதாம். கிட்டதட்ட ஒரு அங்கத்தை எடுக்கிற மாதிரியாம். ஆம்பிளையளுக்கென்டா என்னவோ சொன்னவா. ஆனா ஆம்பிளையளுக்ச் செய்யிறதென்டா பெரியா கஷ்டமில்லையாம். என்ன சொல்லுறீங்க¨

¨உனக்கென்ன விசரே... கொஞ்சம் கவனமா இருக்கிறத விட்டுட்டு. என்ன கதைக்கிற. இதால என்னென்ன பாதிப்பு வருமோ யாருக்குத் தெரியும்.  வீட்டை போய் நல்லா ஓய்வெடு. நான் வந்து எல்லாம் செய்யறென். இருக்கிறத போட்டுச் சாப்பிடு. எனக்கு வைக்க வேணும் என்டு இல்ல சரியா. மலர், கருத்தடை செய்துதான் ஆக வேணும் என்டா அதையும் நீயே போய் செய்துகொள். எனக்கு அதில ஒரு பிரச்சனையுமில்லை. நான்தானே உன்னுடைய முடிவுகளிpல தலைப்போடுறேல்ல. இந்த காலத்தில இப்படி ஒரு புருசன் கிடைக்க குடுத்துவைச்சிருக்கவேனுமடி... குடுத்துவைச்சிருக்க வேணும். ¨

கார் கதவைத் திறந்தாள்;. மெல்ல அவள்; முகம் திருப்பி இதழில் முத்தம் பதித்து விடைபெற்றான். 
வெளியிலும்  இருட்டிப்போயிருந்தது.

 

 
தொட்டிப்பூ
tottipoo.jpg
பனிபடலத்தாமரை
book07.jpg
என் ஏதேன் தோட்டம்